தனிவழி நாயகன்?

Vijay
த.வெ.க. தலைவர் விஜய்
Published on

கோடம்பாக்கத்தில், நம்ம ஆட்கள் நடிக்க வாய்ப்பு தேடி ஆல்பங்களுடன் அலைகிற காலத்திலேயே, இன்னொரு கக்கத்தில் வருங்கால முதல்வர் ஆசையையும் கவ்விக்கொண்டுதான் அலைகிறார்கள் என்னும் சூழலில் நம்ம ஜோசப் விஜய்யும் பல காலமாகவே தன் படப்பாடல்கள் மூலம் ‘நான் தான் சி.எம். இப்ப மணி எட்டு ஏ.எம்.’ என்று பாடிக் களித்ததில் ஆச்சர்யம் கொள்ள ஏதுமில்லை.

திரைப்படப் பாடல்களில் எம்ஜிஆர் மிகுந்த கவனம் செலுத்துவார். ரசிகர்களை உருவாக்கியதுடன் அவர்களை அரசியல் படுத்தியதில் வெளிப்படையாக செல்வாக்கு செலுத்தியவை பாடல்வரிகள் என்று எல்லோருக்கும் தெரியும்.

விஜய் காலத்தில் பாடல்வரிகளை இசை ஒலி அமுக்கிவிட்டது என்றாலும் கூட அம்மாதிரி பாட்டாலே கட்சி ஆசை சொன்ன பாடல்கள் ஏராளம் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஏழெட்டைப் பார்த்துவிடலாம்!

1999இல் வெளிவந்த படம் ‘நெஞ்சினிலே’. நடிகை இஷா கோபிகரின் நெஞ்சினிலே சாய்ந்து விஜய் கொடுத்த ஒரு போஸ் தவிர்த்து இப்படம் குறித்து குறிப்பிட ஒன்றுமில்லை என்றாலும், ஆச்சர்யமாக இப்படத்திலேயே...

...மதராசி தோஸ்த் நீ மனசார கோல்டு நீ டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ’ 

என்று லைட்டாய் சபலப்பட்டிருப்பார் விஜய்.

அதே ‘99இல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ‘மின்சாரக் கண்ணா’ படத்தில்...

தி.மு.க ஆண்டால் என்ன

த.மா.கா ஆண்டால் என்ன

பா.ஜ.க ஆண்டால் என்ன

அ.தி.மு.க ஆண்டால் என்ன

உழைச்சாதான் எல்லாருக்கும் சோறு’

என்று அரசியல் தத்துவம்(!) இடம் பெற்றிருந்தது.

வில்லு 2009 ... ’கார்ல் மார்க்ஸ நினைச்சுப்புட்டா கண்களுக்குள் நெருப்பு வரும்

பெரியாரை மதிச்சுப்புட்டா பகுத்தறிவு தானா வரும்..’

‘சுறா 2010 ... 'தமிழன் வீரத் தமிழன் தலைமை தாங்கும் ஒருவன்'

’வேட்டைக்காரன்’ 2009இல் வந்த படம். முதல்வர் ஆசை என்கிற பூனைக்குட்டி மெல்ல எட்டிப்பார்த்த பாடல்களில்  இந்த ‘ நான் அடிச்சா தாங்க மாட்டே’ பாடலும் ஒன்று. விஜயைச் சுற்றி டான்சர்களும் ரிச் கேர்ள்ஸும் ஆட

...உணவு, உடை, இருப்பிடம்

உழவனுக்குக் கிடைக்கணும் -அவன் 

அனுபவிச்ச மிச்சம்தான்

ஆண்டவனுக்குப் படைக்கணும்...

வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா

காத்திருந்து ஓட்டுப்போட்டு

கருத்துருச்சி நகமடா... என்று கருத்துச் சொல்கிறார் விஜய்.

2013இல் வந்த ‘தலைவா’வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் விஜய்யின் முதல்வர் ஆசை அவஸ்தையை வெளிப்படுத்தின. குறிப்பாக ‘தலைவா தலைவா...தளபதி, தளபதி’ பாடலில் ‘பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினாய்... வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான்’ என்று குரூப் டான்சர்கள் டான்ஸ் மூவ்மென்ட்களோடு ஆரத்தி எடுத்தார்கள்.

அடுத்து 2018இல் வெளிவந்து பல தடங்கல்களை சந்தித்த ‘சர்கார்’ படம்தான் விஜய்யை நிஜமாகவே அரசியலுக்குள் இழுத்துக்கொண்ட படம் என்று சொல்லவேண்டும். ‘ஒரு விரல் புரட்சியே’ என்று முழங்க ஆரம்பித்தவர் ’காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறவன் தான் முதல் திருடன்’ என்று திரைவீரமும் காட்டினார்.

நல்ல நாளிலேயே தில்லைநாயகம் என்கிறபோது, முடிவே எடுத்த பிறகு வெளிவந்த,  ‘கோட்’ பட பாடல்களுக்கு சொல்லவும் வேண்டுமோ ?

பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா?

அதிரடி கிளப்பட்டுமா?

கேம்பெய்னை தான் தொறக்கட்டுமா

மைக்கை கையில் எடுக்கட்டுமா ? என்று பாடல் தொடங்க உடன், ஆடும் பிரபுதேவா ‘என்ன சொன்ன  கேம்பெய்னைத் தொறக்கப்போறியா? என்று கேட்கிறார்.

அதற்கு, ஷாம்பெயின் பாட்டிலைக் காட்டும் விஜய் ‘இல்ல இந்த ஷாம்பெய்னைத்தான் தொறக்கட்டுமான்னு கேட்டேன்’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

அடுத்து வெளிவரவிருக்கும் ‘ஜனநாயகன்’ படமும் நாளடைவில் முழுநீள அரசியல் படமாக மாறிவருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்

‘மணி எட்டு ஏ.எம் ஆயிடுச்சி... நான் சி.எம் ஆகட்டுமா... இல்ல பி.எம். ஆகட்டுமா? என்று பாட்டு கட்டாமலா இருந்திருப்பார்கள்?

இப்படி சி.எம்.கனவுகளில் இருக்கும் ஜனநாயகன் விஜயை நம்ம கூட்டணிக்கு வந்திடுங்க என்று ஏறக்குறைய வெளிப்படையாகவே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவில். எடப்பாடியாரிடம் ஓர் ஆங்கிலப்பத்திரிகையில் இப்படிக் கேட்கிறார்கள்.

கேள்வி: விஜய்யுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறீர்களா?

பதில்: எங்கள் தேர்தல் உத்திகளையும், திட்டங்களையும் பற்றி வெளிப்படையாக கூற  முடியாது. (இல்லை என சொல்லவில்லை)

விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடன் கூட்டணியை முறித்து தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?

ஊகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. (எடப்பாடி நழுவுகிறார்)

அத்துடன் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு எதிராக செயல்படும் திமுக ஆட்சியை வீழ்த்த, ஒரே மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணையவேண்டும் என்கிறார் (நல்ல ராஜதந்திரமான பதில்).

ஜூலை 4 அன்று நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசிய விஜய், பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று அறிவித்தார். தவெக தங்களின் முதல்வர் வேட்பாளராக விஜயை அறிவித்துவிட்டது.

 “விக்கிரவாண்டி மாநாட்டிலேயே ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என தலைவர் விஜய் கூறிவிட்டார். தவெக தலைமையில்தான் கூட்டணி. எங்கள் தலைவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். இதை எங்கள் செயற்குழுவிலேயே அறிவித்துவிட்டோம்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாநாடாக அமையும். அதற்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மதுரை மாநாடும் சுற்றுப்பயணமும் மிகப்பெரிய அதிர்வலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்போகிறது.

 அதேபோல், கூட்டணி தொடர்பான முடிவுகளை தலைவர்தான் எடுப்பார். பல கட்சிகள் தவெக கூட்டணிக்கு வர பேசிக் கொண்டுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் பேசிக் கொண்டுள்ளன.’’ என்று அந்திமழையிடம் கூறுகிறார் தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி.

அதிமுக வென்றால் தே.ஜ.கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா சொல்லிவருவது அதிமுக-பாஜக கூட்டணியில் உரசலை உருவாக்கி வரும் நிலையில் அது ஒரு கட்டாயக் கூட்டணியாக இருக்குமோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களிடம் உள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி முறிந்தால் அதிமுக- தவெக கைகோர்க்கலாம் என்கிற வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன.  அப்படி ஒரு வேளை நடந்தால் வேறு சில கட்சிகள் இந்த கூட்டணிக்கு வரலாம் என்ற ஊகமும் அரசியல் வட்டாரத்தில் பலமாகவே உள்ளது. “விஜய் இன்னும் களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை. அதனால் அவரிடம் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலை அவர் தனியாகச் சந்திப்பாரா என்பது சந்தேகம்தான்” எனக் கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.

ஆனால் இதில் இடிப்பது விஜய் கொண்டிருக்கும் முதல்வர் ஆகும் கனவுதான். அவருக்கு அரசியல் ஆலோசனை கூற முன்வந்த பிரசாந்த் கிஷோர்கூட இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்வதே நல்லது என்று சொன்னதாகவும் அதற்கு விஜய் செவி சாய்க்கவில்லை என்றும் அரசியல்வட்டாரங்கள் சொல்லின.

“விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்கு சமமானது,’’எனச் சொல்கிறார் பத்திரிகையாளரும் தவெக முன்னாள் அரசியல் ஆலோசகருமான அய்யநாதன்.

“விஜய் முதலில் மக்களிடம் சென்று பேச வேண்டும். அவரின் பேச்சால் அவர்கள் எந்த அளவுக்கு ஈர்க்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் சொல்ல முடியும். அதுவரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்கிறார்.

என்ன நடக்கலாம்? பாஜக தலைமைக்கு இன்னும் அதிமுக மீது முழு நம்பிக்கை இல்லை. கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியை முறிக்கலாம் என்ற சின்ன கலக்கம் அவர்களுக்கு உள்ளது என்கிற உள்தகவல்களைப் பார்த்தால் அதிமுக அழைக்கும் திமுகவுக்கு எதிரான பலமான கூட்டணி என்கிற வியூகத்தில் தவெக இணையலாம். ஆனால் அதற்கு எதார்த்தமாகச் சிந்தித்து விஜய் தன் கனவுகளை தாற்காலிகமாக தள்ளி வைக்கவேண்டும். தன் கட்சியின் கட்டமைப்பு, செல்வாக்கு எதுவும் நிரூபிக்கப் படாத நிலையில் இதைவிட சிறந்த வாய்ப்பு அமையப் போவது இல்லை. சில பல சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகக்கு கிடைக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் துணை முதல்வர் கூட ஆகலாம். இப்படிப் பல லாம்கள், லாபங்கள் இருப்பதாக கருத்துகள் உலவுகின்றன.

தனித்து நின்றால் நீண்ட மேடுபள்ளங்கள் நிறைந்த பயணத்துக்குத் தயாராக வேண்டும்.

விஜய் தயாரா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com